சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எலும்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்டம் வாரியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அடையாறு புற்றுநோய் மையத்தில் எலும்பு மாற்று சிசிச்கை விழிப்புணர்வு வாகனம் தொடங்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் விற்றால் கடும் தண்டனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் துணைவியார் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானத்திற்கு 3,300 பேரிடம் இருந்து தானம் பெறப்பட்டுள்ளது. அதன் மூலம் 2,750 பேர் பயனடைந்து உள்ளனர். எலும்புகள் தானமாக தரலாம் என்கிற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து எடுக்கும் எலும்புகளை 25 பேருக்கு பொருத்தலாம்.
போதைப் பொருள்கள் விற்பனையை 100 விழுக்காடு கண்காணித்து கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குட்கா, பான்பராக் போன்ற பாேதைப் பாெருள்களை விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டை வழங்கப்படும். சுகாதார அலுவலர்கள் மூலம் கல்லூரிகளின் முன்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல
நடிகர் விவேக் இறப்பிற்கு தடுப்பூசி காரணம் அல்ல என்ற உண்மையை கண்டறிந்து ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. வதந்தி பரப்புவது எளிது, உண்மையை சொல்வது தான் கடினம். தமிழ்நாட்டில் 66 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 50 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் நாளை (அக்.23) நடைபெறவுள்ளது. உலக நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரிப்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார். குடியரசுத் தலைவரும் அதனை ஏற்பார்" என்றார்.
இதையும் படிங்க: கீழடி கண்டுபிடிப்புகளை டிஜிட்டல் முறையில் தெரிந்து கொள்ளும் திட்டம்: தொடங்கி வைத்த முதலமைச்சர்