வ.உ.சியின் எழுச்சி: தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் 1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி பிறந்தார், நமது வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை என்ற வ.உ.சி. சிறு வயது முதலே தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமைப்பெற்றிருந்த இவர், தன்னுடைய இளமைக்காலத்தில் விடுதலைப்போராட்டம் குறித்தும், தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.
1892ஆம் ஆண்டு பால கங்காதர திலகரின் ஆற்றல் மிகுந்த மற்றும் வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு, திலகரின் சீடரானார். இதனால் ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப்போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப்பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவர் சில காலம் தாலுகா அலுவலகத்தில் பணிபுரிந்தார். பின்னர் அவரது தந்தை அவரை சட்டக்கல்வி பெற திருச்சிக்கு அனுப்பி வைத்தார். கணபதி ஐயர், ஹரிஹரன் ஆகியோர் வ.உ.சிக்கு சட்டம் கற்பித்தனர். எனவே, சட்டத்தேர்வை 1894ஆம் ஆண்டு எழுதித்தேர்ச்சி பெற்றார். 1895ஆம் ஆண்டில் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.
உரிமையியல் மற்றும் குற்றவியல் என இரு வகை வழக்குகளைக்கையாண்டாலும், குற்றவியல் வழக்குகளில் சிறப்புத்தேர்ச்சி பெற்றிருந்தார், வ.உ.சி. வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடிய அதே நேரத்தில், வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப்பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை.
பாரதியாருடன் பாசம் பாராட்டிய வ.உ.சி: 1895ஆம் ஆண்டு வள்ளி அம்மையாரை முதலில் திருமணம் செய்து கொண்டார், வ.உ.சி. ஆனால், வள்ளி அம்மையார் 1900ஆம் ஆண்டு பிரசவத்தில் இறந்துவிடவே, மீனாட்சி அம்மாளை 1901ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
வ.உ.சியின் தந்தையும், மகாகவி பாரதியாரின் தந்தையும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததால், வ.உ.சியும் பாரதியாரும் நண்பர்களாக தங்கள் கருத்துகளைப்பகிர்ந்து கொண்டனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். பாரதியார் தனது உணர்ச்சிமிக்க பாடல்களால் நாட்டு மக்களைத்தட்டி எழுப்பினார்.
இதனால் வ.உ.சி.யும் பாரதியாரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். மக்களின் துயர் துடைக்க "சுதேசி பிரசார சபை", "தர்ம சங்க நெசவு சாலை", "தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்", "சுதேசிய பண்டக சாலை" மற்றும் "வேளாண் சங்கம்" போன்றவற்றை ஏற்படுத்தி மக்கள் குறைகளைக் களைந்தார்.
சுதேசி கப்பலின் அத்தியாயம்: ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் காரணமாக, விவசாயிகள் தங்கள் வாணிபத்தை எளிமையாக மேற்கொள்ள முடியவில்லை. காரணம், இலங்கைக்கு வணிகர்களின் பொருட்களை எடுத்துச் செல்ல ஆங்கிலேயர்களின் கப்பலை மட்டுமே நாம் நம்பி இருக்கவேண்டிய நிலை.
சுயமாக கப்பலை இயக்கவும் முடியாத நிலையில், முதற்கட்டமாக நண்பர்கள் உதவியுடன் 1906ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப்பதிவு செய்தார். இதற்காக, “ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி" யிடமிருந்து கப்பல்களை வாடகைக்கு எடுக்க வேண்டியதாக இருந்தது.
ஆனால், "பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி" இந்தப் புதிய போட்டியை விரும்பாததால், அது "ஷாலேன் ஸ்டீமர்ஸ் கம்பெனி"யை அச்சுறுத்தியது. இதனால் கப்பல்களை வாடகைக்குக் கொடுக்கும் ஒப்பந்தத்தை ஆங்கிலேய அரசு திடீரென ரத்து செய்தது. இதன் காரணமாக, இந்திய கப்பல் நிறுவனத்திற்கென்று சொந்தமாகக் கப்பல் இல்லாததால் இந்திய வணிகர்கள் பாதிப்புக்கு உள்ளாயினர்.
ஆனால், வ.உ.சி உடனடியாக இலங்கை கொழும்புக்குச்சென்று ஒரு கப்பலை வாடகைக்கு எடுத்து வந்து கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடக்கும்படி செய்தார். ஆங்கிலேயர்களின் தொடர் அழுத்தம் காரணமாக வாடகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதும், சுய கப்பல் சேவை மட்டுமே நிரந்தரத்தீர்வாக அமையும் என முடிவு செய்தார்.
இதனால் வட இந்தியாவிற்கு புறப்பட்ட வ.உ.சி., "திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன்; இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டு போவேன்" என்று சூளுரைத்துச்சென்றார். இதன்படியே வ.உ.சி. தனது சபதத்தை நிறைவேற்றி, "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த கப்பல் 42 முதல் வகுப்பு இருக்கைகள், 24 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் மற்றும் 1,300 சாதாரண இருக்கைகள் ஆகியவற்றைக்கொண்டிருந்தது. மேலும் இதில் 4,000 சாக்கு மூட்டைகளை ஏற்றிச்செல்ல இயலும். எஸ்.வேதமூர்த்தி பிரான்ஸ் நாட்டிற்குச்சென்று "எஸ். எஸ். லாவோ" என்ற கப்பலை வாங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திவாலான ஆங்கிலேய கப்பல்கள்: நீராவி இயந்திரம் பொருத்தப்பட்ட இரு படகுகளும் வாங்கினர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக்கப்பலிலேயே அனுப்பினர். ஆங்கிலேய கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்து, இறுதியில் மக்களை இலவசமாக இலங்கைக்கு அழைத்துச்செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
தொடர்ந்து இந்நிலை நீடித்தால் ஆங்கிலேய நிறுவனம் நஷ்டத்தில் இயங்க வேண்டி வரும் என்பதால், சுதேசி கப்பல் நிறுவனத்தை விட்டு விலகினால் 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுப்பதாகக் கூறியதை வ.உ.சி. ஏற்க மறுத்துவிட்டார்.
முதல் அரசியல் வேலை நிறுத்தம்: இந்திய சுதேசி கப்பல் ஆங்கிலேயர்களின் கப்பலுடன் மோத வந்தது என்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட போதும், அது பொய்க்குற்றச்சாட்டு என்று நிரூபித்து இந்திய கப்பல் செல்ல அனுமதி பெற்றார். ஆனால், சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை ஆங்கிலேயர்களால் தடுக்க இயலவில்லை.
தூத்துக்குடி நூற்பாலை தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்தும் அதற்கு உரிய ஊதியமோ? வார விடுமுறையோ? வழங்கப்படவில்லை எனபதை அறிந்த வ.உ.சி நூற்பாலைத் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி வார விடுமுறை மற்றும் கூலி உயர்வை பெற்றுத் தந்தார்.
இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. வ.உ.சி 1908ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல், தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச்செய்து அவர்களை வழி நடத்தி, வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச்செய்தார்.
சுதந்திரப்போராட்ட வீரரான பிபின் சந்திர பால் 1908ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் விடுதலையாக இருந்தார். அப்போது வ.உ.சி. அதை ஒரு விழாவாக கொண்டாட எண்ணினார். ஏற்கெனவே சுதேசிக் கப்பல், நூற்பாலைத் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆங்கிலேய அரசு, இம்முறை தந்திரமாக திருநெல்வேலிக்கு வர செய்து வ.உ.சி.யை 1908ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் நாள் கைது செய்தது.
இவருக்கு ஆதரவாக கடைகள் அடைப்புப்போராட்டமும் நடைபெற்றது. இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம் ஆகும். பின்னர் இந்த வேலைநிறுத்தம் 1908ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் நாள் முதல் மார்ச் 19ஆம் நாள் வரை நடைபெற்றது. இதில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இந்த நிகழ்வு ''திருநெல்வேலி எழுச்சி'' என்று கூறப்படுகிறது.
சிறையில் வாடிய வ.உ.சி: காவல் துறை வ.உ.சி.க்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆங்கில அரசுக்கு எதிராக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட மக்களைத் தூண்டியதற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மற்றொரு சுதந்திரப்போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.
மொத்தமாக 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்பது இந்தியாவில் யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனையாகும். கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட வ.உ.சி, கொத்தடிமைபோல அனைத்து வேலைகளையும் செய்ய காவல்துறையால் நிர்பந்திக்கப்பட்டார்.
நூற்பாலைத்தொழிலாளர்களை விலங்குகள்போல வேலை வாங்குவதற்கு எதிராகப்போராடிய வ.உ.சிக்கு மாடுகள் இழுக்கும் செக்கை இழுக்க வைத்து ஆங்கிலேய அரசு தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டது. உணவு மற்றும் அழுக்கு ஆடையால் தொழுநோயால் பாதிக்கப்பட்ட வ.உ.சி, தொடர் மருத்துவ சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு சிறைத்தண்டனை தரக்காரணமாக இருந்ததால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஸ் என்பவரை வாஞ்சி சுட்டுக்கொன்றதாகத் கூறப்படுகிறது. வ.உ.சி. சிறையிலிருந்தபோது சுதேசிக்கப்பல் நிறுவனத்தை பராமரிக்க உரிய நபர் இல்லாததால் அக்கப்பல் திவாலாகிப் போனது.
மற்றவர்களால் நிறுவனத்தைத்தொடர்ந்து நடத்த முடியாததால் கப்பலை விற்றுவிட்டனர். அதுவும் "எஸ்.எஸ்.காலியோ" என்ற கப்பலை ஆங்கில கப்பல் நிறுவனத்திற்கே விற்றுவிட்டார்கள்.
காந்தியத்தை மறுத்த வ.உ.சி: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் லண்டன் பிரிவியூ கவுன்சிலில் செய்யப்பட்ட முறையீடு காரணமாக தண்டனை குறைப்பு பெற்ற வ.உ.சி, 1912ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நாள் விடுதலை அடைந்தார். அப்போது அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறி இருந்தது. காந்தியின் சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
1920ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. வ.உ.சி. ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார். வ.உ.சி, பாலகங்காதர திலகரின் சீடர். எனவே, “திலகர் செயல் வீரர். காந்திஜி மிதவாதி. வ.உ.சி.க்கு காந்திஜியின் வழிமுறைகளில் விருப்பமில்லை. காந்திஜியின் வழிமுறைகளைப் பின்பற்றுவதா? மனசாட்சிப்படி நடப்பதா?” என வ.உ.சி இறுதியாக மனசாட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
அரசியலிலிருந்து ஒதுங்கி, பின்னர் 1927ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்தார். வ.உ.சி. சிறை சென்றதால் வழக்கறிஞர் பணி செய்வதற்கான உரிமம் பறிக்கப்பட்டது. அவரால் வழக்கறிஞராகப் பணியாற்ற இயலவில்லை. பிறக்கும்போதே செல்வந்தராக பிறந்த வ.உ.சி, தனது சிறை வாழ்க்கைக்குப்பிறகு சிலரின் பண உதவியால் மட்டுமே குடும்பத்தை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
மகனின் பெயருக்கான காரணம்: வ.உ.சி, தான் சிறையில் அரசியல் கைதியாக இருந்ததால் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கும்படி அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். ஆங்கிலேயர் ஈ.எச்.வாலஸ், வ.உ.சி.யின் நேர்மையினையும் திறமையினையும் அறிந்திருந்ததால் மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதி அளித்தார்.
அவரது அச்செயலுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வ.உ.சி தனது கடைசி மகனுக்கு "வாலேஸ்வரன்" என்று பெயரிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றிருந்த வ.உ.சி, மெய்யறம் என்ற தனது நூலில், மாணவர்களின் செயல்பாடு, இல்லறத்தார்களுக்கு அறிவுரை, ஓர் அரசனின் (தலைவனின்) நற்பண்புகள், நன்னெறிப் பாதைகள், உண்மையை அடைவது எப்படி என்று விளக்குகிறார்.
வ.உ.சியின் வரலாற்றைப் பற்றி, ம.பொ.சி எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூலின் பெருமை காரணமாக பின்னாளில் 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி’ என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். தன்னை ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத்தன்மை கொண்டவராக முன்னிறுத்திய வ.உ.சி,
இறுதியில் 1936 நவம்பர் 18இல் தன்னுடைய 64ஆவது வயதில் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாக இம்மண்ணை விட்டும் நம்மை விட்டும் பிரிந்தார்.
இதையும் படிங்க: ”ஜெய்ஹிந்த் ” என முழங்கிய செயல் வீரர் செண்பகராமன்