சென்னை: அய்யம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவர் 2019ஆம் ஆண்டு தன்னையும், தனது குடும்பத்தினரையும் உதவி ஆணையர் கடத்தி சொத்துகளை அபகரித்ததாகப் புகாரளித்திருந்தார்.
இதில் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட காவலர்கள், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
முகாந்திரம் குறித்து விசாரிக்க உத்தரவு
இதனையடுத்து மீண்டும் கடந்தாண்டு நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராஜேஷ் புகார் அளித்தார். இதில் காவல் துறை அலுவலர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று கருதி அந்தப் புகார், டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.
புகாரின் முகாந்திரம் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல்செய்ய அப்போது தமிழ்நாடு டிஜிபியாக இருந்த திரிபாதி, சிபிசிஐடி பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
பின்னர் இதில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட காவலர்களுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்கப்பட்டது.
விசாரணை அறிக்கை தாக்கல்
விசாரணையில் தொழிலதிபர் சீனிவாச ராவ், ராஜேஷிடம் கொடுத்த கடனுக்காக ரவுடிகள், காவல் துறை அலுவலர்கள் மூலம் பிரச்சினை கொடுத்தது தெரியவந்தது.
கடத்தல் சம்பவத்தில் காவல் துறை அலுவலர்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து, இது தொடர்பான விரிவான அறிக்கையை கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாடு டிஜிபியிடம், சிபிசிஐடி காவலர்கள் தாக்கல்செய்தனர்.
5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
இதனைத் தொடர்ந்து சென்னை திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், காவலர்கள் கிரி, பாலா, சங்கர், அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் சீனிவாச ராவ், அவரது மகன் தருண் கிருஷ்ண பிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய, அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இவர்கள் மீது பொய்யான ஆவணத்தைத் தயாரித்தல், மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தனிப்படை அமைத்து தீவிர தேடல்
ஏற்கனவே காவல் உதவி ஆணையர் சிவக்குமார் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது ஆய்வாளர் சரவணன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார். இது தொடர்பாக உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
தற்போது கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட காவல் அலுவலர்கள் உள்ளிட்ட 10 பேரை கைதுசெய்ய, சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 10 ஆண்டு கால தேடல்... மகனை பெற்றோருடன் இணைத்த ஆதார் கார்டு!