சென்னை: பெரம்பூர் படேல் ரோடு பகுதியில் கண்ணைய்யா லால் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி பெண் ஒருவர் தாலி செயினில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ய வந்துள்ளார். தாலி என்பதால் உரசிப் பார்த்தால் சேதாரமாகிவிடும் எனக் கூறியுள்ளார்.
நகை அடகு வைக்க ஆதார் கார்டு நகல் கொடுக்குமாறு கேட்டபோது, நாளை எடுத்து வருவதாக பெண் கூறியுள்ளார். பெண் சென்டிமென்ட்டாக பேசியதை வைத்து 40 ஆயிரம் ரூபாய் கேட்ட நிலையில், 20 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்த அடகு கடைக்காரர், மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை நாளை ஆதார் கார்டு கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து பணத்தை வாங்கிச் சென்ற பின் மறுநாள் பெண் வராததால், கண்ணையா லால் ஜெயினுக்கு சந்தேகம் ஏற்பட்டு, நகையை சோதனை செய்து பார்த்த போது, போலி நகை எனத் தெரிய வந்துள்ளது. உடனடியாக செம்பியம் காவல் நிலையத்தில் கண்ணையா லால் ஜெயின் புகார் அளித்தார்.
புகார் அளித்ததோடு மட்டுமல்லாமல் அடகு கடை உரிமையாளர்கள் வைத்திருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில், தனது அடகு கடையில் மோசடி செய்த பெண்ணின் சிசிடிவி காட்சியை வைத்து எச்சரிக்கை பதிவிட்டுள்ளார். அந்த வாட்ஸஅப் குரூப்பில் உள்ள சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியைச் சேரந்த அடகு கடை உரிமையாளர் சுரேந்தர் குமார்(52). தனது அடகு கடையிலும் இதே போன்று ஒரு வாரத்துக்கு முன்பு பெண் ஒருவர் நகை அடகு வைத்து சென்றதாகக் கூறியுள்ளார்.
இதேபோல, அந்த கடைக்கு வந்த பெண் 7 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து, 22 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று சென்றதால், பெண் கொடுத்த நகையை சந்தேகத்தில் சோதனை செய்தபோது போலி நகை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அடகு கடை உரிமையாளர் சுரேந்தர் இது குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி செய்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் கீழ்ப்பாக்கம் ஏ.கே. நகரை சேர்ந்த மகாலட்சுமி(33) என்பதும், இவர் ஓராண்டு முன்பு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் டைப்பிஸ்டாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட மகாலட்சுமி இதே போல் செம்பியம், திரு.வி.க.நகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போலி நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து மகாலட்சுமியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2500 ரூபாய் பணம், 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். மேலும் 14 வருடங்களுக்கு முன் திருமணம் ஆனதாகவும், திருமணம் ஆகி குழந்தை பிறந்தபின் ஒரு வருடத்தில் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து சென்றதால், 8ஆம் வகுப்பு படிக்கும் மகனின் படிப்புக்காக மோசடி செய்து கல்வி கட்டணம் செலுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இவ்வாறு போலி நகை வைத்து பெற்ற பணத்தில் தன்னை அழகாக காட்டிக்கொண்டதாகவும், இதன் மூலம் பல சின்னத்திரையில் நடிகையாக நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணைக்குப் பிறகு எழும்பூர் 5வது கூடுதல் நீதிமன்றத்தில் மகாலட்சுமியை ஆஜர்படுத்தினர்.
மகாலட்சுமியின் வாக்குமூலத்தை படித்த நீதிபதி, மகனின் படிப்புக்காக மோசடி செய்ததை ஒப்புக்கொண்டதால், அதன் அடிப்படையில் மகாலட்சுமியை காவல் நிலைய ஜாமீனில் எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளனர். இருப்பினும் செம்பியம், திரு.வி.க நகர் பகுதியில் மோசடியில் ஈடுபட்டதாக புகார் இருப்பதால், அந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேலும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை மாடலை பின்பற்றும் தாம்பரம் மாநகராட்சி.. சீக்ரெட்டை உடைத்த மாநகராட்சி ஆணையர்!