சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை சரியானதுதான் என அமலாக்கத்துறைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பும் வழங்கி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் மீது 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையும், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற ஆவணங்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நான்காவது முறையாக நீட்டித்த அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் சுதந்திர தின விருதுகள் - காவல் அதிகாரிகள் 6 பேருக்கு அறிவிப்பு!
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த கைது குறிப்பாணை, குற்றப்பத்திரிகை, அதனுடன் தாக்கல் செய்த ஆவணங்கள் என அனைத்தின் நகல்களையும் முழுமையாக வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி அல்லி தலைமையிலான அமர்வு, இந்த மனு தொடர்பான தகவலை அமலாக்கத்துறைக்குத் தெரிவிக்கச் செந்தில் பாலாஜி தரப்பிற்கு அறிவுறுத்தினார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டதால், அதன் நகலைக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வழங்குவது வழக்கம்.
அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி தரப்பு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யும் முன், எதன் அடிப்படையில் ஜாமீன் கோரலாம் என்பது குறித்து முடிவெடுப்பதற்காக ஆவணங்களைக் கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: "சில மாதங்களில் நீட் தடுப்புச் சுவர் உதிர்ந்து விழும்; இருவரது மரணமே இறுதியாக இருக்கட்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை