சென்னை: தனசேகரன், தசரதன், தனஞ்செயன், சரவண பெருமாள் ஆகிய நான்கு சகோதரர்களுக்குச் சொந்தமாக சென்னை ஓட்டேரியில் 8,063 சதுர அடி கொண்ட நிலம் உள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த நிலத்தின் ஒரு பகுதியை, தனியார் கிறித்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் ஜான் வெங்கடேசன் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2009ஆம் ஆண்டு இந்த நிலத்தை சகோதரர்கள் நால்வரும் விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்பொழுது, தானே அந்த நிலத்தை வாங்கிக் கொள்வதாக பாதிரியார் ஜான் வெங்கடேசன் கூறியுள்ளார். இதனையடுத்து, இரண்டு கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு வாங்கிக் கொள்வதாக இரு தரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்பணமாக ரூ.10 லட்சத்தை பாதிரியார் கொடுத்துள்ளார். ஒப்பந்தம் போடப்பட்டு பல மாதங்களாகியும் நிலத்திற்கான முழு தொகையை பாதிரியார் ஜான் வெங்கடேசன் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளையும் பாதிக்கப்பட்ட நால்வரின் குடும்பத்தை சார்ந்தவர்கள் எடுத்துள்ளனர்.
ரவுடிகளை வைத்து மிரட்டல்: இதற்கிடையில், முன் தொகையைத் திருப்பிக் கொடுத்து விட்டு நிலத்தை தாங்கள் விற்க முயற்சிக்கும் போது பாதிரியார் ரவுடிகளை கொண்டு மிரட்டியுள்ளார். இதனால், கடந்த 2012 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதில் கிடைத்த நீதிமன்ற உத்தரவின்படி, சென்னை மத்திய குற்றப் பிரிவின் மூலம் பாதிரியார் ஜான் வெங்கடேசன் மற்றும் அவர் நடத்தி வரும் ‘லவ் அண்ட் கண்ஷன்’ என்ற சமூக அறக்கட்டளை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், பாதிரியார் ஜான் வெங்கடேசனுக்கு எதிரான வழக்கில் இருந்து அவர் தப்பித்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு நிலத்திற்கான முழுமையான பணத்தை தந்து விடுவதாக பாதிரியார் நம்பகத்தன்மையுடன் கூறியுள்ளார். ஆனால், நிலத்தின் மதிப்பை ரூ.6 கோடி என உயர்த்தி மீண்டும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்காக ஒரு கோடி ரூபாய் பணத்தை முன் தொகையாக கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை சில நாள்களில் தருவதாகவும் பாதிரியார் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். ஆனால் மீண்டும் பாதிரியார் ஜான் வெங்கடேசன், நிலத்திற்கான முழு பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்யத் தொடங்கியுள்ளார்.
வெளிநாட்டு நிதி: இதற்குக் காரணம், ஆறு கோடி ரூபாய் மதிப்பில் நிலத்தை வாங்குவது போன்று ஒப்பந்தம் செய்துகொண்டு, அந்த நிலத்தை வைத்து தான் நடத்தும் கிறித்துவ அமைப்பிற்காக வெளிநாட்டிலிருந்து நிதி வசூல் செய்ய பாதிரியார் திட்டமிட்டதும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தாங்கள் வாங்கிய முழு முன் தொகையையும் திருப்பி கொடுத்து விட்டு நிலத்தை தருமாறு பாதிரியாரிடம் கேட்டபோது, மீண்டும் ரவுடிகளை வைத்து மிரட்டியுள்ளார்.
குறிப்பாக, தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கு மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளையும் விதித்ததன் அடிப்படையில், தங்கள் நிலத்தை வைத்து வெளிநாட்டிலிருந்து நிதி வசூல் செய்வதற்கு நில உரிமையாளர்கள் ஒத்துழைக்காததால், ரவுடிகளை வைத்து தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
எனவே, தங்கள் நிலத்தை வைத்து வெளிநாட்டில் நிதி வசூல் செய்ய திட்டமிட்டிருக்கும் பாதிரியார் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் நிலத்தை மீட்டுத் தருமாறு நான்கு சகோதரர்களும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து பாதிரியார்கள் மீது புகார்: இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் முட்டி போட்டுக்கொண்டு பாதிரியார் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தருமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த மே 12ஆம் தேதி வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட விதிகளை பின்பற்றாமல் தனியார் கிறித்தவ தொண்டு அமைப்புகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஆறு என்.ஜி.ஓ க்களிடம் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் கிறித்தவ அமைப்பைச் சேர்ந்த ஜான் வெங்கடேசன் என்ற பாதிரியார், நிலத்தை அபகரித்து வெளிநாட்டில் நிதி வசூல் செய்ய முயற்சிப்பதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கொலை - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்; காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்