சென்னை: ஒன்றிய முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஜூலை 16) காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், ஒன்றிய அரசின் எரிபொருள் வரி, ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.
தொடர்ந்து அவர், மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். அவரது அரசு கரோனா தொற்றை சிறப்பாகக் கையாளுவதற்காக வாழ்த்துத் தெரிவித்தேன்.
பாகுபாட்டுக்கு எதிராகச் சட்டம்
பெட்ரோல், டீசல் விலை, வரி விதிப்பு, கூட்டாட்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவருடன் கலந்துரையாடினேன். பாரபட்சத்துக்கு எதிரான மாநிலச் சட்டம் இயற்றுவது தொடர்பாக அவருடன் பேசினேன். இது பற்றிய முன்வரைவையும் அவரிடம் வழங்கினேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
பாகுபாட்டிற்கு எதிராக சசி தரூர் போர்க்கொடி
மதம், மொழி, இனம், சாதி, பாலினம், நிறம், பிறப்பிடம், ஹெச்ஐவி தொற்று பாதிப்பு போன்ற எந்த அடிப்படையிலும் கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும், மற்ற பொது இடங்களிலும் ஒருவர் மீது மற்றொருவர் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதை வலியுறுத்தும்விதமாக பாரபட்சத்துகு எதிரான மாநிலச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என சசி தரூர் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
ஏற்கனவே இதற்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதிகள் உள்ள போதிலும், பல்வேறு இடங்களில் நடைமுறையில் பாரபட்சம் காட்டபடுவதால் மாநிலச் சட்டம் மூலம் அவற்றைக் களைய முடியும் என்றும், இதன்மூலம் அடிப்படை உரிமைகள் மீட்கப்படும் என்றும் சசி தரூர் அறிவுறுத்திவருகிறார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியில் தொடரும் சாதிய பாகுபாடு; பணியிலிருந்து விலகிய உதவிப் பேராசிரியர்!