சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கோவை செல்வராஜ், ''அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த என்ன அவசரம் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் நல்ல முடிவாக நினைக்கிறார்கள்.
கட்சியை சர்வாதிகாரமாக அபகரிக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள். நேற்று டெல்லியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், நாங்கள் தேர்தல் நடத்த தேதி அறிவிக்கவில்லை, வழக்கு மேல்முறையீட்டில் இருக்கும்பொழுது எதெல்லாம் பண்ணக்கூடாது என எங்களுக்கு தெரியாதா என்று பேசியுள்ளார்.
இவர்கள் சொல்லித்தான் இந்த தடை உத்தரவு போடப்பட்டதாகவும் சொல்கிறார். நீதிபதிகள் சொன்ன கருத்தைத் திரித்து பரப்புகின்ற சி.வி.சண்முகம் வழக்கறிஞருக்கு படித்தாரா? எதற்கு படித்தார் என்று தெரியவில்லை. ஓபிஎஸ் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பட்டியல் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் என்று கொடுத்த பட்டியல் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என கூறினார்.
இதையும் படிங்க:வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு