தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10 முதல் 12ஆம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு வழக்கம்போல் நடைபெறும்.
அங்கன்வாடிகளில் பயிலும் மாணவர்களுக்கு உரிய சத்துணவுக்குரிய பொருட்களை அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைத்து கையொப்பம் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 45 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த மாணவர்களுக்கு தினமும் முட்டை சத்துணவில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வழங்குவதற்கான முட்டை, பள்ளிகளுக்கு இரு தினங்கள் முன்பே அனுப்பி வைக்கப்படும். பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு, வரும் 18ஆம் தேதி வரை வழங்குவதற்கான முட்டை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டை வீணாக்காமல் அவர்களுக்கு வழங்குவதற்கு சமூக நலத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து சமூக நல ஆணையர் ஆபிரகாம் கூறுகையில், தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 40 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு கோடியே 30 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளதால், தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களை வரவழைத்து மொத்தமாக மாணவர்கள் அல்லது அவரது பெற்றோர்களிடன் வழங்கி கையொப்பம் பெற்றுக்கொள்ள வேண்டும் .
எக்காரணத்தைக் கொண்டும் சத்துணவு திட்ட முத்திரையிடப்பட்ட முட்டைகள் சந்தைக்கு வரக்கூடாது. ஏதேனும் சந்தையில் விற்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்குவதற்கான முட்டைகள் ஒரு நாள் முன்கூட்டியே அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க:கருணாசின் பேச்சால் சட்டப்பேரவையில் சலசலப்பு!