சென்னை: மடிப்பாக்கம் அடுத்த, மூவரசம்பேட்டை கூட்ரோடு சந்திப்பில், நேற்று (பிப்.26) போலீசார் ரோந்து பணியிலிருந்தனர். அப்போது மதியம் மூன்று மணியளவில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதிலிருந்து இரண்டு நபர்கள் இறங்கித் தப்பி ஓடினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாகன ஓட்டுநர் மற்றும் வாகனத்திலிருந்த மற்றொருவரை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். இதில், வாகன ஓட்டுநர் பெயர் அப்துல் ரகுமான்(28), கேரள மாநிலம் திருவனந்தபுரம், வல்லக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், கேரள மாநிலத்தில் இவர் மீது இரு கஞ்சா வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. வாகனத்தில் பயணித்தவர் சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேம்நாத்(43) என்பதும், இவர் மீது மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில், வாகனத்தின் உள்ளே சோதனை செய்தபோது, அதில் நான்கு வெள்ளை நிற கோணிப்பைகளில் தலா 50 கிலோ வீதம் 200 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்து கஞ்சா மற்றும் வாகனத்தைக் கைப்பற்றி மடிப்பாக்கம் காவல் நிலையம் கொண்டு வந்து போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது, வாகனத்திலிருந்து தப்பி ஓடி தலை மறைவாகியவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த சேதுராமன் மற்றும் தாம்பரத்தைச் சேர்ந்த செல்வம் என்பதும் அவ்விருவரும் ஆவடி, வேப்பம்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வீட்டில் வைத்துக்கொண்டு சென்னையின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 60 லட்சம் ரூபாய் எனத் தெரிவித்த போலீசார், வாகனத்திலிருந்து தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டு வரவே இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள்" - திருமாவளவன்!