சென்னை: திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தலா 117 தொகுதிகள் ஆண் - பெண் என இருபாலருக்கும் சமமாக வாய்ப்பு அளித்து, வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.
மேலும், வடசென்னை பகுதியிலுள்ள திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று (மார்ச் 9) திருவொற்றியூர் பகுதிகளில் தனது தேர்தல் பரப்புரையை அவர் தொடங்கினார்.
திருவொற்றியூர் தொகுதியில் ஏன் போட்டி
அப்போது அவர், திருவொற்றியூர் தொகுதியில் அனல்மின் நிலையத்தை உருவாக்கி சாம்பலை தூவி வாழ்வாதாரத்தை அழித்து வாழும் இடத்தை சாம்பலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். காட்டுப்பள்ளியில் 6 ஆயிரம் ஏக்கர் இடத்தை அதானி என்னும் ஒற்றை முதலாளிக்கு கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறார்கள்.
இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக சமரசம் இல்லாமல் சண்டை செய்ய துணிந்து நிற்கும் பிரபாகரனின் தம்பி, உங்களை நம்பி திருவொற்றியூர் தொகுதியை தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறேன்.
கல்வி தவிர அனைத்து இலவசத்தையும் ஒழிப்போம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான இலவச கல்வி தருவோம். மக்களுக்கான வழங்கப்பட்டு வரும் இலவச திட்டங்களை அடியோடு ஒழிப்போம். இலவசங்களை எதிர்பார்க்காத அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பாடுபடுவோம்.
தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம்” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
இதையும் படிங்க: கமல் தலைமையில் உருவானது மூன்றாவது அணி!