சென்னை: சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கூவம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி, 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு அதிலிருந்தோர் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தற்போதுவரை வீடு வழங்கப்படாமல் உள்ள குடிசை வாழ் மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு சென்ற சீமானிடம் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க தங்களது குறைகளை கூறினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "மக்களை வெளியேற்றுவதில் திமுக, அதிமுக என்று வேறுபாடில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி ஆட்சியிலும் இதுபோன்று நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு என்றால் மின் இணைப்பு, எரிவாயு, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை எப்படி கொடுத்தார்கள்.
இந்த இடம் யாருக்கு வழங்கப்பட உள்ளது. எந்த நோக்கத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. 2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு இருக்கும் என பிரதமர் கூறுகிறார். ஆனால், இப்போது வரை பலருக்கு வீடில்லை.
பொருளாதாரமே கவலை - ஸ்மார்ட் சிட்டி எதுக்கு
வெள்ள அபாயம் வரும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை காரணமாக வைத்து கூவம் கரையோரம் வாழ்பவர்களை வெளியேற்றுவதாக கூறுவது பொய். அவர்களின் வாழ்வாதாரம் இந்த பகுதியில்தான் இருக்கிறது.
அரசின் பொருளாதாரமே கவலையில் இருக்கிறது. கூவம் ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி எதுக்கு, தலைநகரில் தமிழர்கள் வாழக்கூடாது என திட்டமிட்டு இவ்வாறு செய்கிறார்கள். ஆக்கிரமிப்பு என்ற சொல்லே அருவருக்ககத்தக்கது.
நீதிமன்றமே ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக இருக்கும்போது தாஜ்மஹாலாகவே இருந்தாலும் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்தால் அகற்றுவோம் என நீதிமன்றம் கூறியது நகைப்பிற்குரியது. ஆட்சியருக்கு தெரியாமல் இந்த மக்கள் எப்படி இங்கு குடியேறி இருக்க முடியும்.
எத்தனையோ நடகத்தில் இது ஒன்று
நாம் வள்ளி திருமண, அரிச்சந்திர மயான கண்டம், பவளக்கொடி போன்று பல நாடகங்களைப் பார்த்திருப்போம். ஆதேபோல் தான் தமிழ்நாடு பாஜகவின் மேகேதாட்டு அணை எதிர்ப்பு போராட்ட அறிவிப்பை நாம் பார்க்க வேண்டும்.
அண்ணாமலை இது குறித்து நேரடியாகவே பிரதமரிடம் பேசலாம். ஆனால், போராட்டம் என்று சொல்லி வெட்டி பில்டப் கொடுக்கிறார்.
சீமானின் கேள்விகள்
பொதுமக்களின் மனுக்களை வாங்கி பெட்டியில் பூட்டிய ஸ்டாலின் 100 நாளில் தீர்த்த பிரச்னைகள் என்ன. மார்க்கண்டேய நதியில் ஐந்தே மாதத்தில் அணை கட்டியதை திமுக, அதிமுகவால் ஏன் தடுக்க முடியவில்லை.
சீனா இலங்கையை தங்களது மாகாணமாக மாற்றி விட்டது. நான் முதல்வராக இருந்தால் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையை மறுக்க முடியுமா. திபெத் , வங்கதேச, பாகிஸ்தான் அகதிகள் இந்து என்றால் ஈழத்தமிழர்கள் யார்.
அண்ணாமலை பரிதாபத்திற்குரியவர், அலுவலராக இருந்தவரை தேவையில்லாமல் பதவி விலக வைத்துவிட்டனர். பிரதமர் தாடி முடியை வளர்த்துதான் மக்களின் துயரத்தில் பங்கேற்க வேண்டுமா" என்று சாரமாரியான பல கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிங்க: பழுதடைந்த தொலைக்காட்சிப் பெட்டிகள் - இட மாற்றம்