இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த்தொற்று பரவலால் இந்தியாவிலேயே அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிற மாநிலமாக தமிழ்நாடு இரண்டாவது இடத்திலிருக்கிறது. இவ்வேளையில், நோய்த்தொற்று குறித்து சோதனை செய்ய சீனாவிலிருந்து தமிழ்நாடு அரசு இறக்குமதி செய்த 4 லட்சம் வெகுவிரைவுக் கருவிகளை (RAPID TESTING KIT) மத்திய அரசு இடைமறித்து தன்வசப்படுத்தியிருப்பது எதனாலும் சகிக்கமுடியாத, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும்.
பாஜக அரசு பதவியேற்றது முதல் தொடர்ச்சியாக தமிழின விரோத நடவடிக்கைகளையும், வஞ்சகம் செய்யும் பணிகளையும் திட்டமிட்டு செய்துவருகிறது. கரோனா நோய்த்தொற்றால் அதிகப்படியான இழப்புகளைச் சந்தித்து தமிழ்நாடு தத்தளித்து நிற்கையில், அரசு கேட்ட 9,000 கோடி ரூபாய் நிதியைத் தராது வெறுமனே 517 கோடி ரூபாயை அளித்து வஞ்சித்த மத்தியில் ஆளும் மோடி அரசு, தற்போது தமிழ்நாடு அரசின் நிதியில் கொள்முதல் செய்யப்பட்டப் பொருட்களைப் பறித்து அதனை மற்ற மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிப்பதாக வந்த செய்தி அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் தருகிறது.
தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தமிழின விரோதப் போக்கினை உளமார்ந்து உணர்ந்து வருகிற தமிழின இளையோர் இந்தியா என்கிற பெருநாட்டின் மீது கொண்டிருக்கிற மாசற்ற பற்றினை இழந்து வருகிறார்கள் என்பதனையும், இப்படிப்பட்ட அவநம்பிக்கை உளவியலுக்கு தமிழின இளையோரை மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசு வலுக்கட்டாயமாக உட்படுத்துகிறது என்பதனையும் இந்தச் சமயத்தில் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.