சென்னை: கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு அங்குள்ள புன்னைவன நாதர் சந்நிதியில் இருந்த புராதன மயில் சிலை, ராகு, கேது ஆகிய சிலைகள் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
விசாரணைக் குழு
அந்த வழக்கில், சிலை மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர், அறநிலையத் துறையினர் உள்ளடக்கிய விசாரணைக் குழு அமைத்து, 6 வார காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆகம விதிப்படி கோயில்களில் தொன்மை வாய்ந்த சிலைகளை தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கும் முறை இருப்பதால், திருடுபோன தொன்மை வாய்ந்த சிலைகள் மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர தேடுதல்
உள்ளாட்சித்தேர்தல் பணிகள் காரணமாக இந்த விவகாரம் சில நாள்கள் கிடப்பில் போடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உதவியுடன் தெப்பக்குளத்தில் சிலைகள் உள்ளதா? என தேடும் பணியில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கோயிலில் உள்ள மூன்று மண்டபங்களுக்கு எதிரே உள்ள குளத்தில் சிலைகள் போடப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்ததால், அங்கு முதலில் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெப்பக்குளத்தினுள் சுமார் 6 படகுகளைப் பயன்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருகிறது.
நீச்சல் பயிற்சி பெற்ற 10 வீரர்கள், ஸ்கூபா வீரர்களும் குளத்துக்குள் இறங்கி சிலைகளைத் தேடி வருகின்றனர்.
சற்று சிரமம்
13 அடி ஆழ குளத்தினுள் 5 அடி முழுவதுமாக சேறும் சகதியுமாக இருப்பதால் சிலையைத் தேடும் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. தேடும் பணி நிறைவடைந்த பிறகே குளத்தினுள் சிலை உள்ளதா இல்லையா என்ற உண்மை நிலவரம் தெரியவரும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யவேண்டும் - வணிகவரித் துறை பதில் மனு