இலங்கையில் நடைபெற்ற ஈழப்படுகொலையை நினைவுகூரும் விதமாக ஏப்ரல் 18 முதல் மே 18 வரை ஒருமாத காலம் தமிழ் இனப்படுகொலை மாதமாக அனுசரிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டு அதன் தொடக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இந்நிகழ்வில் சிங்கள அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "சர்வதேச மன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என உலகநாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு செய்தது வெறுக்கத்தக்கது. அதனை இந்திய செய்திருக்கக்கூடாது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க ஆளும் அதிமுக அரசு முன்னரே மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அதனை செய்யாமல் தவறி விட்டது. இனி வரும் காலங்களில் இந்தியா இப்படி செய்ய முடியாது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, "கரோனா தடுப்பூசி குறித்து எனக்கு அச்சம் இருந்ததால் அதை நான் செலுத்திக்கொள்ளவில்லை. விவேக்கும் நானும் மிக நெருக்கமாக பழகியவர்கள். நான் விசாரித்தவரையில் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை. அவருக்கு இதய அடைப்பு இருந்துள்ளது. யோகா, உடற்பயிற்சி செய்வதால் அதனை சோதிக்காமல் இருந்திருக்கிறார். தடுப்பூசி போட்டதால் காய்ச்சல், அழுத்தம் கூடுதலாக ஏற்பட்டிருக்கலாம். ஆனால் தடுப்பூசி முழு காரணம் அல்ல" என கூறினார்.
மேலும் வேளச்சேரி மறு வாக்கு பதிவில் குறைவான வாக்கு பதிவாகியுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "இரு திராவிட கட்சிகளையும் மக்கள் வெறுத்துவிட்டனர். எனவேதான் குறைவான வாக்கு பதிவாகியுள்ளது" என்று பதிலளித்தார்.