சென்னை: மாநகராட்சியில் வழங்கப்பட்ட கட்டட அனுமதியின் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி மாநகராட்சியின் நகரமைப்பு துறையின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 5,000 சதுர அடி வரையிலான கட்டட அனுமதியானது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளர்கள் மூலமாகவும், 5,001 சதுர அடி முதல் 10,000 சதுர அடி வரை ரிப்பன் கட்டட அனுமதியானது தலைமையிடத்தில் உள்ள நகரமைப்பு பிரிவின் மூலமாகவும் அளிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள் கட்டட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையின் தான் கட்டடங்களை கட்ட வேண்டும்.
அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்களின் மூலம் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் ராயபுரம் மண்டலத்தில் கடந்த மார்ச் 17 முதல் 24 ஆம் தேதி வரை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் 125 நபர்களுக்கு இடத்தை காலிசெய்ய குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 99 கட்டடங்களை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொண்டி அருகே சங்ககால ஊர்களின் தடயங்கள் கண்டுபிடிப்பு!