பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையன்று, அத்துறை சார்பில் சட்டப்பேரவையில் புள்ளி விவரங்கள் அடங்கிய ஆவணப் புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் உள்ள புள்ளிவிவரங்களும் 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்களும் மிகப் பெரியளவில் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை ஒன்றை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், 'கல்வித் துறை மாநில தகவல் முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் புள்ளிவிவரங்களும் அலுவலர்கள் அளித்த புள்ளி விவரங்களும் வேறுபட்டு இருக்கிறது.
இணையதளத்தில் அலுவலர்கள் மாணவர்கள் குறித்த விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அதில், மாணவர்கள் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளி விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் வரும் 24ஆம் தேதிக்குள் கல்வித் துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.