தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 45 லட்சம் மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்கள் தமிழ் வழியிலும், அதிகளவிலான மாணவர்கள் ஆங்கில வழியிலும் படித்துவருகின்றனர். தமிழ் வழியில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச கல்வி அளிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு கல்வி கட்டணமாக ரூ.250 வரை வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ் வழியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதைபோல், ஆங்கில வழியில் படிக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என, சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலுக்குவருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு அம்சமாக ஆங்கில வழிக் கல்விக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கப்பட்டுவருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்கச் செய்யும் வகையில், ஆங்கில வழிக் கல்விக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசின் இந்த அறிவிப்பு காரணமாக இரண்டு லட்சம் மாணவர்கள் வரை பயனடைவார்கள் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.