சென்னை: கரோனா தொற்றின் காரணமாக 2021-22ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கான அரசாணையையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடாமல், பாடத்திற்கு எதிரே தேர்ச்சி என மட்டும் பதிவு செய்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தற்பொழுது கட்டாயம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேசிய தேர்வுமுகமைக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வேறு சில மாநிலங்களும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கியுள்ளதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு, இந்த கோரிக்கையை பரிசீலனை செய்வதாக தேசிய தேர்வு முகமை அதிகாரி கூறியதாகவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தெரிவித்தார்.