தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு அரசின் கவனத்தை ஈர்த்து பேசும்போது, 'பள்ளிக் கல்வித் துறையில் உள்ள ஆயிரத்து 248 பள்ளிகளில் புதிதாக நூலகமாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை கைவிட்டு அந்தப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். மேலும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கிராமப்புற நூலகங்களை திறந்து செயல்படுத்த வேண்டும்' எனக் கோரிக்கைவிடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழ்நாட்டில் ஆயிரத்து 248 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது. அவற்றில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. அப்படிப்பட்ட பள்ளிகளைத் தேர்வு செய்து தற்காலிகமாக நூலகமாக இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளியில் ஆசிரியர் இருந்து என்ன பணியை ஆற்றப் போகின்றனர். எனவே அந்தப் பள்ளிகளுக்கு 100 புத்தகங்கள் அளித்து நூலகர்கள் மூலம் 45 இடங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒரு மாணவரும் இல்லாத பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றினால் அங்கு நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருவார்கள்.
இதனால் மாணவர்கள் நல்ல முறையில் கற்க முடியும். தமிழ்நாடு அரசுக்கு எப்போதும் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. அதேபோல், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி நூலகங்களை திறந்து செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது" என தெரிவித்தார்.