சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை அளித்தாலும், கற்றல் கற்பித்தலில் உள்ள பின்னடைவு, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக இன்று முதல் 28-ஆம் தேதி வரையில் சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தை கொடி அசைத்தும், பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமாெழி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை கல்வித்துறை அலுவலர்கள் செய்வது வழக்கமானது தான். அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்வதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. தகைச்சால் பள்ளிகள் 28, மாதிரிப் பள்ளிகள் 25 ஆரம்பிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாதிரிப் பள்ளிகளில் எல்லா மாவட்டத்திற்கும் கொண்டு செல்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளியை நோக்கி வந்தாலே தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து விடும். எனவே தான் நாங்கள் அரசுப்பள்ளியை நோக்கி வர வேண்டும் என கூறுகிறோம்" என்றார்.
மேலும், "அனைவருக்கும் ஐஐடி, சிறார் திரைப்படம் உள்ளிட்ட கற்றல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்பிக்கிறோம். எனவே எங்களைத் தேடி வாருங்கள். அரசுப் பள்ளியை நோக்கி அதிகம் வருகிறார்கள். ஆசிரியர் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு பற்றாக்குறையும் இருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 10,143 ஆசிரியர்களை எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதுவரையில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகிறோம். நிரந்தரமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படும் போது தற்காலிக ஆசிரியர்கள் வெளியில் செல்வார்கள். தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணக் குழுவினால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்" எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "2023-24 ம் கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. அப்போது அரசின் நலத்திட்டங்கள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள், இணைச்செயல்பாடுகள் விபரங்களை தெரிவிக்கப்பட உள்ளன. மேலும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களும் பங்கு பெற உள்ளனர்.
இந்த விழிப்புணர்வின்போது அரசுப் பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் வழிப்பிரிவுகளுடன் துவக்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கையை இந்தக் கல்வியாண்டில் உயர்த்த அறிவுறுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றேர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ட்விட்டர் பக்கத்தில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேருங்கள் என்பதை வலியுறுத்தம் வகையில் விழிப்புணர்வு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.