சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் குறித்த பாடம் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் இடம்பெற உள்ளது. அரசியலைக் கடந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தமிழ் ஆற்றல் என்பது அனைத்து தரப்பினராலும் போற்றத்தக்க வகையில் அமைந்திருந்தது.
இயல், இசை, நாடகம் ஆகிய துறையிலும் முத்திரை பதித்தவர். எனவே அவரின் சிறப்பை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து வரும் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற இருக்கின்றது. தற்போது பாட புத்தகங்கள் அச்சிடும் பணி முடிவடைந்து, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூறும்போது, ஓடி வந்த இந்திப் பெண்ணே பாரீர் கோழை உள்ள நாடு இதுவல்லவே என தனது 13 வயதில் போர் பரணி பாடி, தன்னுடைய 87 வயதில் அந்த மாெழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணியை குறிக்கும் வகையில் அவரை பற்றிய பாடம் வருகிறது என தெரிவித்தார்.