சென்னை: கரோனா தொற்றின் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுமார் 600 நாள்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. குறிப்பாக 1-ம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமலேயே 3-ம் வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது.
இதனையடுத்து, கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை குறைப்பதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தை, விழுப்புரம் மாவட்டம் முதலியார் குப்பம் கிராமத்தில் அக்டோபர் 27-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல இடங்களில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் செயல்பாடு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இதனிடையே, இல்லம் தேடிக் கல்வித் திட்டம், பள்ளி மாணவர்களிடத்திலும், பெற்றோர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது நாள் வரை 6.47 இலட்சம் தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் மார்ச் 11 ந் தேதி வரையில் 1,78,525 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு, தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதன் மூலம் 35,00,000 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில், சில சமூக அமைப்புகளை சார்ந்தவர்கள், மாநில, மாவட்ட, வட்டார அளவிலான ஆலோசணைக்குழு உறுப்பினர்களாகவும் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து தன்னார்வலர்கள், ஊக்குநர்கள், மற்றும் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி பள்ளிக்கல்வித்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், நிபந்தனைகளின் அடிப்படையில் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இந்த அடையாள அட்டையை வேறு எந்தவிதமான செயலுக்கும் உபயோகிக்கக் கூடாது. இப்பணி முடிந்த பிறகு, அடையாள அட்டையைத் தவறாமல் உரிய மாவட்ட கல்வி அலுவலரிடம் அளிக்கப்படவேண்டும்.
மேலும், அடையாள அட்டை மாற்றத்தக்கதல்ல. அடையாள அட்டை தொலைந்து விட்டால், உடனடியாக உரிய அலுவலரிடம் எழுத்து மூலம் தகவல் அளிக்கப்பட வேண்டும். அடையாள அட்டை எவரிடம் கிடைத்தாலும், அதனை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அத்தகவலினை உரிய மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : நினைவு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பி. சிலை