சென்னை: தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை 2-வது உலக தமிழ் மாநாடு 1968ஆம் ஆண்டு நடக்கும் போது அறிவித்ததன் அடிப்படையில் 1970ஆம் ஆண்டு, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட்டது. முழுவதும் தமிழ் ஆராய்ச்சிக்காகவும் மட்டும் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்துக்கு, கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு சார்பில் 34 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செப்டம்பர் 2014ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த நிதியின் மூலம் தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தில் ஓலைச்சுவடி பாதுகாப்பு மையம் அமைக்க ஒதுக்கப்பட்டு, இதற்கான டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் சாஃப்ட்வேர் சொல்யூஷன் என்ற நிறுவனம் 32 லட்சம் ரூபாய்க்கு குறைவாக தொகையை குறிப்பிட்டு, டெண்டரைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் டெண்டர் ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாகத் தான் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த டெண்டரைப் பெறுவதற்கான நிறுவனங்களின் தகுதி என அரசு அறிவித்திருந்ததில், குறைந்தபட்சம் ஐந்து வருடம் இந்த பணியை மேற்கொண்டு இருக்க வேண்டும் எனவும், இதுபோன்று ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பது தொடர்பான ஒரு திட்டத்தையாவது செய்திருக்க வேண்டும் என தகுதிகளைக் குறிப்பிட்டு இருந்தது.
ஆனால், இந்த தகுதிகள் எதுவும் இல்லாத டெக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக டெக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷன் நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமார், ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் மையமாக பாதுகாப்பதற்கு மற்றும் ஸ்கேன் செய்வதற்கும் தேவையான மென்பொருள் தயாரித்து கொடுத்துள்ளதோடு மட்டுமல்லாது, மர வேலைகள் மற்றும் ஏசி கேமராக்கள் ஆகியவையும் ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்திற்குக் கொடுத்துள்ளார்.
குறிப்பாக ஜனவரி 2015ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2015ஆம் ஆண்டு வரை 7 தவணைகளாக ரசீதுகள் அனுப்பி, 32 லட்ச ரூபாய் அளவில் பணத்தை, அப்போதைய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த விஜயராகவனிடம் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அரசின் பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளருக்கு புதிதாக கட்டமைக்கப்பட்ட ஓலைச்சுவடி பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டிருந்தனர்.
அந்த அடிப்படையில் செயற்பொறியாளராக இருந்த நாகமாணிக்கம் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு மேற்கொண்டதில் ஓலைச்சுவடி பாதுகாப்பு மையம் கட்டப்பட்டதற்கு வெறும் 19.50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது எனத் தெரியவந்தது. அப்போது இயக்குநராக இருந்த விஜயராகவன் மற்றும் டெக்ஸ் சாஃப்ட்வேர் சொல்யூஷனின் மேலாளர் விஜயகுமார் இணைந்து ஒதுக்கப்பட்ட நிதியில் 12.66 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதல திட்டத்தின் இயக்குநராக இருக்கும் விஜயராகவன் மற்றும் இந்த டெண்டர் ஒதுக்கப்பட்ட டெக்ஸ் சாப்ட்வேர் சொல்யூஷன் மேலாளர் விஜயகுமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழை வளர்ப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறை போடப்பட்ட டெண்டரில் மோசடி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழங்கிய நிதிகளும் முறையாக கையாளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.