சென்னை:(Scam) எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் 17 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கறிஞர் அசோக் குமார் என்பவர் புகார் அளித்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் மற்றும் உயர் கல்வித்துறை அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 52 கல்லூரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக 52 கல்லூரி முதல்வர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்மன் அனுப்பினர். அதனடிப்படையில் இன்று (டிசம்பர் 21) ஆலந்தூரில் அமைந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் 6 தனியார் கல்லூரி முதல்வர்கள் விசாரணைக்கு வந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அசோக் குமார் கூறுகையில், "கடந்த 2018ஆம் ஆண்டு தணிக்கைத் துறை வெளியிட்ட அறிக்கையில் 52 கல்லூரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் தற்போது விசாரணை நடைபெறுகிறது. இந்த முறைகேட்டில் கல்லூரி நிர்வாகிகள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள், உயர் கல்வி துறை அலுவலர்கள் பலர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: மதுரையில் எலும்பு வங்கி - திறந்து வைத்தார் அமைச்சர் மா.சுப்ரமணியன்