சென்னை: சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி சிம்பு மற்றும் கெளதம் மேனன் நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்க்க நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண் உட்பட குழந்தைகளும் வருகைத் தந்திருந்தனர்.
ஆனால், அவர்கள் திரையரங்கிற்கு உள்ளே சென்று படம் பார்க்க ரோகிணி தியேட்டர் நிர்வாகமும், ஊழியர்களும் மறுப்பு தெரிவித்து வெளியே அனுப்பியுள்ளனர். பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து படம் பார்க்க வந்தவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறுவதில் என்ன நியாயம்? என பொதுமக்கள் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர்.
அது மட்டுமின்றி நரிக்குறவர்கள் சமுதாயத்தை சேர்ந்த மக்களும் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர். பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரத்தில் ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:தூரிகையான தமிழ் எழுத்துக்கள்.. கருணாநிதி உருவத்தை வரைந்த ஓவியர் செல்வம்!
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், நரிக்குறவர் மக்களின் ஜாதி சான்றிதழ் சரி பார்த்து பொன்னேரி வட்டாட்சியரிடம் விளக்கம் கோரியுள்ளனர். அதில் அவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது சான்றிதழ் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து ரோகிணி திரையரங்கு ஊழியர்கள் மீது போலீசாரால் போடப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் என்கிற பிரிவின் கீழ் போலீசார் வழக்கை மாற்றி பதிவு செய்து திரையரங்கு ஊழியர் குமரேசனை கைது செய்தனர்.
இதனிடையே இந்த விவகாரத்தில் ரோகிணி தியேட்டர் ஊழியர் குமரேசன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நிபந்தனையின் அடிப்படையில் குமரேசனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய அளவில் பரபரப்பான பார்க்கப்பட்ட விவகாரத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:புல்லட் ரயில் இருக்கட்டும் முதலில் பாதுகாப்பை கொடுங்க.. அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!