சென்னை: அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகள் வெளியிட்டதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், 6 மதம் சிறைத் தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கரிடம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலையாக இருந்த நிலையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர்கள் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக இரண்டு வழக்குகளும், 2021ஆம் ஆண்டு பிரதமருடைய பயண விவரங்களை பொது வெளியில் வெளியிட்டதற்காக 2 வழக்குகளும், சவுக்கு சங்கர் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கடலூர் சிறையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த மத்திய குறப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், சென்னை எழும்பூர் 5-வது குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்திரேட் ஜெகதீசன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதிபதி 4 வழக்குகளையும் சேர்த்து வரும் 25ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி!