தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்ரல்.06) காலை 7 மணிக்குத் தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தனது குடும்பத்துடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மதுரவாயில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெற்குன்றம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் வாக்களித்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது “வாக்குப்பதிவு சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. புகார்கள் ஏதும் வரவில்லை. ஈவிஎம் இயந்திரம் தொடர்பாகவும் புகார்கள் ஏதும் வரவில்லை. ஒன்பது மணி முதல் வாக்கு விழுக்காடு தெரியவரும். தமிழ்நாடு முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது” என்றார்.
இந்த வாக்குச்சாவடி மையம் வாழை மரத் தோரணம், சிவப்புக் கம்பளத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் இங்கு வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு கையுறைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: வாக்களிக்கும் முன் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை