சென்னை: அதிமுகவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பயணம் செய்தவர், சசிகலா. ஜெயலலிதாவிற்குப் பல்வேறு காலகட்டங்களில் நெருக்கடி ஏற்பட்டபோது சசிகலா ஜெயலலிதாவுடன் பயணம் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் முதலமைச்சராகப் பதவியேற்க இருந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றார். அப்போது தனக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்ததால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்தார். 4 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து வந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையே ஏற்பட்டது.
சசிகலாவால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்த்துக் கொண்டு 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார். 2021ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியை பிடித்தது. அதில் இருந்து மீண்டும் அரசியலில் பயணிக்கத் தொடங்கிய சசிகலா, சுற்றுப்பயணம், தொண்டர்களுடன் அலைபேசி உரையாடல், கட்சியினரின் நிகழ்ச்சிகள் போன்றவற்றை மேற்கொண்டார். அதன் பின்னர், 'பல மாதங்களாக அதிமுகவை ஒன்றிணைப்பேன், அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியை தொடங்கியுள்ளேன், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவை ஒன்றிணைக்கும் பணி முடிவடையும்' என சசிகலா கூறிக் கொண்டே வந்தார்.
தர்மயுத்தம் தொடங்கி தான் சிறை செல்வதற்கு காரணமாக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரிக்கும் சசிகலா, எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்க மறுக்கிறார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 14) செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "சட்டப்பேரவையில் பேசுவதற்கு ஓ. பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் என்ற முறையில் அனுமதி வழங்கப்பட்டது என சபாநாயகர் கூறுகிறார். ஆனால், அருகில் இருந்த அதிமுகவை சேர்ந்தவர் (ஈபிஎஸ்) அனுமதி வழங்கக்கூடாது என கூறுகிறார்" எனத் தெரிவித்தார். இதில் ஈபிஎஸ் பெயரை சசிகலா உச்சரிக்கவில்லை. இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அனைவரையும் எப்படி ஒன்றிணைக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலா சிறை சென்றவுடன் அவரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான பணிகளை ஈபிஎஸ் தரப்பினர் மேற்கொண்டனர். அதன்படி ஓபிஎஸ் தரப்பினருடன் கைகோர்த்துக் கொண்டு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தனக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது என சசிகலா நினைக்கிறார். ஆனால், தனக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை உச்சரிக்கிறார். பன்னீர்செல்வத்தை ஏற்றுக்கொண்ட சசிகலா, எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளமாட்டார் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இருந்து நீக்கும் வரை எதுவும் பேசாத பன்னீர்செல்வம், அவரை அதிமுகவில் இருந்து நீக்கியவுடன், அனைவரும் ஒன்றிணைய வேண்டும், சசிகலா, டிடிவி தினகரனை நானே நேரில் சந்திப்பேன் எனக் கூறிவந்தார். ஆனால், ஈபிஎஸ்ஸுடனான மோதல் காரணமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால் சில காலம் காத்திருந்தார். ஆனால், பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றமும், பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்று உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியதால் ஓபிஎஸ்ஸிற்கு இன்னும் குறைவான வாய்ப்புகளே உள்ளன.
இதனால் தனது செல்வாக்கை நிரூபிக்க திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கு, வரும் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறவுள்ள ஓபிஎஸ் தரப்பினரின் திருச்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் செல்வேன் என சசிகலா தெரிவித்துள்ளார். இதில் சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் கைகோர்க்க வாய்ப்புள்ளது.
2017ஆம் ஆண்டு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வாகி இருந்தார். அதனுடைய வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போது 90 விழுக்காடு அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். சசிகலாவின் எண்ணப்படி எடப்பாடி பழனிசாமியையும் ஒன்றிணைத்தால் தான் அது அதிமுகவாக இருக்கும்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்க்கக்கூடாது என உறுதியாக உள்ளனர். இதற்கு ஒருபடி மேலே போய் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனிசாமி போன்றவர்களை இன்றைக்கும் சசிகலாவை விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலாவை அதிமுகவில் இணைத்தால் ஒருசில தலைவர்கள் தங்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என்று கருதுகின்றனர்.
இதையெல்லாம் கடந்து அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளார். ஆனால் இதற்கு டிடிவி தினகரன் கூட ஆதரவு தராமல், தான் தனிக்கட்சி நடத்துகிறேன் என ஒதுங்கி செல்கிறார் என கூறப்படுகிறது.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், "அதிமுக என்ற கட்சியானது எடப்பாடி பழனிசாமியிடம் சென்றுவிட்டது. சசிகலாவிற்கு அதில் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுச்செயலாளர் வழக்கும் அவருக்கு சாதகமாக இல்லை. இதனால் வேறு வழி இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவை இணைப்பேன் எனக் கூறுகிறார். ஓபிஎஸ் மாநாட்டிற்கு சசிகலா கலந்து கொண்டாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. சமுதாய ரீதியிலான இணைப்பாகவே இருக்கும். ஆனால், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை இணைக்க பாஜக முயற்சி செய்யும். அதில் எடப்பாடி பழனிசாமி இல்லாத பட்சத்தில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: "அண்ணாமலையா? மக்குமலையா?" - கெடுவிதித்த ஆர்.எஸ். பாரதி