ஆடை, அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் பிரபல நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட நகரங்களில் அதன் கிளைகள் உள்ளன. இந்நிலையில், சரவணா ஸ்டோர் குழுமம் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறி வருமான வரித்துறையினர் கடந்த ஜனவரி மாதம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 433 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில், இன்று சென்னையில் தி.நகர், பாடியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸின் நிறுவனங்களில் 50க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் வரித்துறை (ஜி.எஸ்.டி) அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவனம் ஜிஎஸ்டி தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் பேரில், சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்தியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஜிஎஸ்டி கணக்குகள் சரிபார்க்கப்பட்டதாகவும் , முக்கிய ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும், சோதனை முடிந்த பிறகே பல்வேறு விபரங்கள் வெளிவரும் எனவும் ஜிஎஸ்டி தரப்பு அதிகாரிகள் தெரித்தனர்.