சென்னை: புதிய சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் பயிற்சி கல்லூரி டிஜிபி ஆக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையராக இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றிய சங்கர் ஜிவால், தமிழ்நாடு டிஜிபியாக நியமிக்கப்பட்ட நிலையில், புதிய காவல் ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 1968ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவரான சந்தீப் ராய் ரத்தோர், குவைத் நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் சரளமாகப் பேசும் புலமை வாய்ந்தவர்.
1992ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோர், ஏஎஸ்பியாக பரமக்குடி மற்றும் நாகர்கோவில் மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கினார். அதன் பிறகு 1996ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.பி.யாகவும், அதன் பின்னர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை ஆணையராகவும் பதவி வகித்தார்.
1998ஆம் ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் இருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அப்போது துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்தார். 1998ஆம் ஆண்டு டெல்லி திகார் சிறையில் கமாண்டிங் அதிகாரியாக பணியாற்றிய சந்தீப் ராய் ரத்தோர், அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு சென்னை போக்குவரத்து துணை ஆணையராகப் பதவி வகித்தபோது, முதல்முறையாக போக்குவரத்து எல்இடி சிக்னலை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் 2001 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் உலக அமைதிக்கான சிறப்பு காவல் படையில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றார். 2003ஆம் ஆண்டு சிபிசிஐடியில் எஸ்.பி.யாக இருந்தபோது, முத்திரைத்தாள் மோசடி தொடர்பான வழக்கை விசாரணை மேற்கொண்டார்.
2005ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது, அம்மாவட்ட காவல் துறைக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுக் கொடுத்தார். 2015ஆம் ஆண்டு தேசிய பேரிடர் மீட்புப்படை தலைவராக இருந்தபோது கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளம், சென்னை முகலிவாக்கத்தில் ஏற்பட்ட கட்டட விபத்து உள்ளிட்ட பேரிடர்களை திறம்பட கையாண்டு உள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் சிறப்பு அதிரடிப்படை தலைவராக இருந்தபோது நக்சலைட்டுக்கு எதிரான முக்கோண எல்லைகளின் பாதுகாப்புக்காக பணிபுரிந்து இருந்தார். 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைவராக இருந்தபோது அதிகப்படியான இளைஞர்களை காவல் துறையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பின்னர் சென்னையில் இருந்து பிரிந்த ஆவடி காவல் ஆணையரகத்தின் காவல் ஆணையராக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பதவி வகித்தார். அதன் பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு கிடைத்த சந்தீப் ராய் ரத்தோர், ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சிக் கல்லூரியில் டிஜிபியாக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில், தற்போது சென்னை காவல் ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு பதவி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிடமாற்றம்!