தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளாக கருதப்படும் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்காக அடிக்கடி வெளியில் வர வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், “மக்கள் வெளியே செல்லும்போது ஏற்படும் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்ய வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் உதவியுடன் மாநகராட்சி இணைந்து நடமாடும் காய்கறி விற்பனையை தொடங்கவுள்ளது.
இந்த நடவடிக்கைகளினால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்காக கூட்டமாக நிற்கும் நிலை தவிர்க்கப்படும். இதனால் நோய்த் தொற்று ஏற்படுவது தடுக்கப்படும். இதுபோன்ற பல ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.
சென்னை மாநகரில் மக்கள் அதிகமாகக் கூடி பொருள்களை வாங்கும் 25 சந்தைகள் பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை மாற்றப்பட்டு, அங்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடமாடும் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் விற்பதற்காக 5,000 மூன்று சக்கர சைக்கிள்கள், 2,000 மோட்டார் வாகனங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவுள்ளன.
இவற்றில் காய்கறிகளை விற்கும் வணிகர்கள் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு விற்பனை செய்வார்கள்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: நகரத்திலிருந்து கிராமத்திற்கு குடியேறிய தொழிலதிபர் குடும்பம்!