கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்துவருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர வீட்டை விட்டு வெளியே வர தடை விதித்துள்ளனர்.
இதனால் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், மதுபானக் கடைகள் ஆகியவற்றை அரசு இயங்க தடை விதித்திருந்தனர். இதனால் பொதுமக்கள் பலர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். குறிப்பாக மதுக்கடைகள் இல்லாததால் போதைக்கு அடிமையாகி உள்ளவர்கள் சிலர் சானிடைசர் போன்ற மருந்துகளை குடித்த சம்பவமும் அரங்கேறி வந்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சில தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்த தளர்வுகளில் குறிப்பாக நாளை( மே 7) முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மதுக்கடையை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் நாளை (மே 7) மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோத வாய்ப்பு உள்ளதால் காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் தலா இரண்டு காவலர்கள், இரண்டு ஊர்க்காவல் படையினர், ஒரு தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
மதுபானம் வாங்க வரும் மதுப்பிரியர்கள் ஒவ்வொருவருக்கும் இடையே ஆறடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் கடைகளில் வரும் கூட்டத்தைப் பொறுத்து மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். குறிப்பாக கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்திவிட்டு வரிசைப்படுத்த உத்தரவளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகமாக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவும் பிறப்பித்துள்ளனர். அதேசமயம் 10 மணியிலிருந்து 1 மணிவரை 50க்கு மேற்பட்ட வயதுள்ளவர் மதுக்கடைக்கு வரவேண்டும், 40லிருந்து 50 வயது உள்ளவர்கள் 1 மணியிலிருந்து 3 மணிவரையும், 40வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 3 மணியிலிருந்து 5 மணிவரை மதுபானங்களை பெற வரலாம் என்ற உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.