தமிழ்நாட்டில் நடைபெறும் கனிமவள கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், இந்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட 212 பரிந்துரைகளை நீதிமன்றத்திற்கு அளித்திருந்தது. இதையடுத்து, சகாயம் குழு அல்லாமல் புதிய நிபுணர் குழு அமைத்து இழப்பீடு தொடர்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி தென்னிந்திய கிரானைட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று(அக்.9) இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜெயசந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் தொடர்ந்து சட்ட விரோத கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாகவும், இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முறையாக மேற்கொள்ளவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், கனிமவளங்கள் கொள்ளையைத் தடுக்க நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தாலும், அதனை அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், தமிழ்நாட்டில் சுரண்டபட்ட கனிமவளங்களில் இதுவரை எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின் பதிவு செய்யப்பட்டுள்ள 70 வழக்குகளின் நிலை குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, இந்த முறைகேட்டில் தொடர்புடைய பலருடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தது. இதையடுத்து, கனிமவள கொள்ளைகளை தடுக்கும் வகையில் அனைத்து மாநில மற்றும் மாவட்ட எல்லைகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.
கனிமவள கொள்ளைகளை தடுக்க எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.