சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை ஆகிய இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்திலிருந்து, 50 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுகளை திரும்பப்பெறக் கோரி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது சுங்கச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஃபாஸ்டாக் தொழில்நுட்ப முறை ஆகியவற்றை போராட்டம் நடத்தும் ஊழியர்கள் சேதப்படுத்தியதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரியும், 800 மீட்டர் சுற்றளவுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்க கோரியும் திருச்சி சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஊழியர்கள் அமைதியான முறையில் போரட்டத்தை நடத்தலாம். வாகன போக்குவரத்துக்கு எந்த வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. சுங்கச்சாவடி பணிகள் பாதிக்காத வகையில் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்து கருணாகரன், “நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படுகிறது. மேலும் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் பணிகளில் இடையூறு ஏற்படுகிறது” என கூறினார்.
தொடர்ந்து போராட்டம் நடத்தும் ஊழியர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், “மனுதாரர் நிறுவனம் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. அமைதியான முறையில்தான் போராட்டத்தை நடத்தி வருகிறோம். சுங்கச்சாவடி அறைகளை பூட்டி வைக்கவில்லை” என வாதிட்டார்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு சிறப்பு வழக்கறிஞர் ஏ. செல்வேந்திரன் ஆஜராகி, “நீதிமன்ற உத்தரவின்படி சுங்கச்சாவடிக்கு 24 மணி நேரமும் காவல்துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது. சுங்கச்சாவடி மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு வழங்குவதுடன், சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு வரப்படுகிறது.
மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால், அதை வழங்க தயாராக இருக்கிறோம். அதற்கு ஆகும் கூடுதல் செலவை சுங்கச்சாவடி நிறுவனம் திரும்பச் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இரண்டு சுங்க சாவடிகளுக்கும் தேவையான பாதுகாப்பை வழங்கி சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால். அதற்கான கட்டணத்தை சுங்கச்சாவடி நிறுவனம் செலுத்தினால், உரிய கூடுதல் பாதுகாப்பினை காவல்துறை வழங்க வேண்டும். அதேநேரம் அமைதியாக போராட்டம் நடந்தும் ஊழியர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. அவர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்க வேண்டும். இரண்டு சுங்கச்சாவடிகளிலும் தேவையான இடங்களில் சுங்கச்சாவடி நிறுவனம், தனது சொந்த செலவில் காவல்துறை உதவியுடன் வீடியோ கேமராக்களை நிறுவ வேண்டும்.
அதில் பதிவாகும் காட்சிகளை காவல்துறை கண்காணித்து விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், அதை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். இரண்டு வார காலத்திற்கு இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு காவல்துறையும், சுங்கச்சாவடி நிறுவனமும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பான விசாரணை வருகிற அக்டோபர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்திற்கு அனுமதி, சுங்கச்சாவடிக்கு பாதுகாப்பு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு