சென்னை:ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் தலைமையில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்) ஆகிய திட்டங்களுக்கான காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், முதன்மைச் செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (கூடுதல் பொறுப்பு), இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் இதர உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய ஊரக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், 'தமிழ்நாட்டில், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் I மற்றும் II-ன் கீழ் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் III-ன்கீழ் எடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன. நடப்பாண்டிற்கான சாலைகள் மற்றும் பாலங்களுக்கான முன்மொழிதலுக்கான ஒப்புதலை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்)-இன் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு உரித்தான நிதியினை விரைந்து வழங்கிடவும் ஒன்றிய அரசினை கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:வடசென்னையில் கட்சி போஸ்டர்கள் அகற்றும் பணி தீவிரம்!