தமிழ்நாட்டில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தால் பெற்றோர்கள் பயனடைந்துள்ளனரா? மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்து உள்ளதா? இதில் உள்ள சிக்கல்களை களைவது எப்படி என்பதை காணலாம்.
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 'இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009' - இன் அடிப்படையில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த இட ஒதுக்கீடு சிறுபான்மையல்லாதோர் பள்ளிகளில் மட்டுமே அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதற்கு, பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் என பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் தமிழ்நாட்டில் 2013 -14 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் என தெரிவித்தது.
ஆனால் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளான எல்கேஜி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் எல்கேஜி மற்றும் யூகேஜி படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனாலும் மத்திய அரசிடமிருந்து இந்த திட்டத்திற்கு வரவேண்டிய நிதி வழங்கப்படாமல் தொடர்ந்து நிலுவையில் உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டத்திற்காக செலவிடும் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஒரு ஆண்டிற்கு சுமார் 400 கோடி வரை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களை தனியார் பள்ளியில் சேர்த்ததால் அரசு பள்ளியில் சேர கூடிய மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. எனவே இந்தத் திட்டத்திற்கு செலவிடும் தொகையை அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த செலவிட வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் 2013 - 14 ஆம் கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 157 இடங்களில் 49 ஆயிரத்து 864 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2014-15 ஆம் கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து நான்கு இடங்களில், 86 ஆயிரத்து 729 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
2015-16 ஆம் கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 232 இடங்களில் 94 ஆயிரத்து 811 மாணவர்களும், 2016-17 ஆம் கல்வி ஆண்டில், ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 43 இடங்களில் 96 ஆயிரத்து 506 மாணவர்களும், 2017-18ஆம் கல்வி ஆண்டில் 90 ஆயிரத்து 607 மாணவர்களும், 2018-19 ஆம் கல்வி ஆண்டில், 90 ஆயிரத்து 200 மாணவர்களும், 2019-20 ஆம் கல்வி ஆண்டில், சுமார் 70 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருகிறது.
கல்வியாளர்கள் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு வரையறையை வகுக்க வேண்டும் எனவும், மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் அருகாமை பள்ளி எது என்பதை வரையறை செய்து அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் முடிக்கப்படும். இந்தாண்டு கரோனா வைரஸ் தாக்கத்தால் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள 8 ஆயிரத்து 608 தனியார் சுயநிதி பள்ளிகளில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 771 இடங்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை இணையதளம் மூலம் 86 ஆயிரத்து 318 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் அக்டோபர் ஒன்றாம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. இதில் சுமார் 56 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 55 ஆயிரம் இடங்களை நிரப்பும் வகையில் அக். 12 ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு இணையதளம் மூலம் மாணவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதுபற்றி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கூறுகையில், ''இந்தாண்டு கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு சான்றிதழ்கள் வாங்க முடியாமல் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் முதல் சுற்றுக்கு 80 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தாலும், 50 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பள்ளியில் இதுவரை சேர்ந்துள்ளனர். எனவே இரண்டாவது சுற்று மாணவர் சேர்க்கைக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
மேலும் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு நிதி உதவி வழங்குகிறது. நர்சரி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவிட்டு ஆறாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்படுவதில்லை. எனவே இந்தத் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு வரை வழங்கப்படும் நிதியை மேலும் நீட்டிக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் தியாகராஜன் கூறுகையில், ''அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆண்டுக்கு 400 கோடி ரூபாய் வரை அரசு செலவு செய்கிறது. இந்த 400 கோடி ரூபாயை அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்கவும் செலவு செய்தால், அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும். அவ்வாறு செய்தால் ஏழை மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து தரமான கல்வியை இலவசமாக அளிக்க முடியும்'' என தெரிவித்தார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்கள் பல்வேறு சிக்கல்களை அனுபவித்தாலும், அதனை வெளியில் சொல்லாமல் தவிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் பயிற்சியை தொடங்கும் தமிழ்நாடு அரசு - அடுத்த ஆண்டு செய்ய வேண்டியது என்ன?