சென்னை: காந்தி ஜெயந்தி கொண்டாட மற்றர்வர்களைப் போல் ஆர்எஸ்எஸ் சகோதரர்களுக்கும் உரிமை உண்டு என்று தெலங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். “தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு..? என்றும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
சி.பா.ஆதித்தனாரின் 118ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அவரது உருவ சிலைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆதித்தனார் நினைவை போற்றுவதில் பெருமை கொள்கிறேன். பட்டப்படிப்பு படித்தவர்கள்தான் படிக்க முடியும் என்று இல்லாமல் எழுத்துக் கூட்டி படிப்பவர் கூட படிக்க முடியும் என்று எளிய முறையில் பத்திரிகையை நடத்தியவர் அவர்.
எந்த மாநிலமாக இருந்தாலும் அதில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் போன்ற வன்முறை சம்பவம் நடைபெற கூடாது. இதுபொது மக்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. ஒரு மாநிலத்தில் சமய சார்பற்ற உணர்வு இருக்க வேண்டும். அது தவறும் போது பலரை கோபமுறச் செய்கிறது.
எந்த வகையிலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அமைதியோடு கூடிய பாதுகாப்பு அன்பு உணர்வு இருக்க வேண்டும். ஆளுநர் எப்படி நடந்து கொள்கிறார் என்று என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-களுக்கு தெரியும். ரங்கசாமி, மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்தால் நான் உடன் இருப்பேன். முதன்மை ஆளுநராக தான் செயல்படுகிறேன் தவிர முதலமைச்சராக இல்லை. எவ்வளவு விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை என்றைக்கும் மக்களுக்காக செயல்படுகிறேன்.
எல்லோரும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை சொல்ல முடியும். அது அமைதி பேரணி தான் அதற்கு ஏன் தடை செய்ய வேண்டும்..? அதுமட்டுமின்றி தேச உணர்வு உள்ளவர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செய்வதில் என்ன தவறு...?.
காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்.எஸ்.எஸ் சகோதரர்களுக்கும் மற்றவர்களை போல் உரிமை உள்ளது. புதுச்சேரியில் மருந்து தட்டுப்பாடு இல்லை. ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என ஒரு சில கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருகின்றனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு எதிரான திருமாவளவன் மனு... நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு...