சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம், கடந்த 2017ஆம் ஆண்டு கமர்சியல் ஷோரூம் கட்டுவதாகக் கூறி இந்தியன் வங்கியில் இருந்து முதலில் 150 கோடி ரூபாயும், பின்னர் 90 கோடி ரூபாயும் கடனாக பெற்றது. அதேபோல அடுத்த ஆண்டும் 90 கோடி ரூபாய் கடனாக சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் நிறுவனம் பெற்றது.
ஆனால், அந்த கடனை சொன்ன காரணங்களுக்குப் பயன்படுத்தாமல் வேறு விவகாரங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், வாங்கிய கடனையும் நிறுவனம் அடைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக இந்தியன் வங்கி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி கே.எஸ். குப்தா சிபிஐ-யிடம் புகார் அளித்திருந்தார்.
குறிப்பாக சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வந்த சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனம் மற்றும் அதன் பங்கு தாரர்களான சுஜாதா, ஒய்.பி. ஸ்ரவன் ஆகியோர் இந்த முறைகேட்டில் பங்கு வகிப்பதாகவும், இந்த முறைகேட்டால் தங்களுக்கு 312 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு இந்தியன் வங்கி சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
புகாரின் அடிப்படையில் சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்தார், பங்குதாரர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சில அரசு அலுவலர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே இந்த விவகாரத்தில் கடந்த ஜனவரி மாதம் தியாகராய நகரில் உள்ள சரவணா கோல்டு பேலஸ் நிறுவனத்தை எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்தியன் வங்கி ஜப்தி செய்தது.
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக கருதி அமலாக்கத்துறை சார்பில் இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் நிறுவனத்தின் 234.75 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: போலீசாரிடம் சிலையை விற்க வந்த கடத்தல்காரர்கள் சிக்கிய கதை..!