நெருங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலர்கள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் இன்று (மார்ச் 11) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த இரண்டு பேரிடம் சோதனை நடத்திய போது, அவர்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த 19 லட்சம் ரூபாய் பணம், 5.5 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள், தங்க வளையல் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோபால் சிங், சையது அன்சார் பாஷா ஆகியோர் என்பதும் இருவரும் திருப்பதியில் வெள்ளி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் சென்னை சவுகார்பேட்டையில் வெள்ளி கட்டி வாங்குவதற்காக திருப்பதியில் இருந்து சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், வெள்ளி கொலுசுகள், தங்க வளையல் ஆகியவற்றை தேர்தல் அலுவலர்களிடம் ரயில்வே காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தேர்தல் 2021: திருவள்ளூரில் இதுவரை ரூ.50 லட்சம் பறிமுதல்