சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தலைவர் கனகராஜ் தாக்கல் செய்திருந்த மனுவில், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட கீழமை நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்க்க உத்தரவிட வேண்டும். தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைக்க வேண்டும். அரேபிய எண் முறைக்கு பதில் தமிழ் எண் முறையை அமல்படுத்த வேண்டும். அரசாணைகளை தமிழில் வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் மகேசன் காசிராஜன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாகவும், தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் இவற்றை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் ஆராய்ச்சிக்காக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதன்பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது, கீழமை நீதிமன்றங்களில் சாட்சியங்களை தமிழ் மொழியில் பதிவு செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது போன்றவற்றையும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஆராய்ச்சிக்கென 1971ஆம் ஆண்டிலேயே தமிழ் மொழி வளர்ச்சி இயக்குனரகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், தமிழ் வளர்ச்சித் துறையில் 2019-20ஆம் ஆண்டில் ரூ.70 கோடியே 91 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.65 கோடியே 48 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும், 2020-21ஆம் ஆண்டில் 63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.53 கோடியே 86 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் ...தேனி மாவட்ட அதிமுகவினர் கொண்டாட்டம்