சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் 5ஆவது தெருவில் மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. கீழ்தளத்தில் தொழிற்சாலையும் மேல்தளத்தில் குடோனும் செயல்பட்டு வரும் நிலையில், நேற்றிரவு (ஜனவரி 22) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவ தொடங்கியதை அடுத்து, தொழிலாளர்கள் மூவர் அவசர அவசரமாக வெளியேறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், தொழிற்சாலை உள்ளே சிலிண்டர் வெடிக்க தொடங்கியதால், அருகிலிருந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். அதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. குறுகிய சாலை பகுதி என்பதால் சிறிது சிரமத்துடன், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், எக்ஸ்பிளைநெட், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக குடியிருப்புப் பகுதிக்குள் எரிந்து வரும் பிளாஸ்டிக் பொருள்களால் அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் பாதிப்பு உருவானது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதுமே கரும் புகை சூழ்ந்து காட்சியளித்தது.