சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு காசிமேடு பல்லவ நகரைச் சேர்ந்த ரவுடி பிரேம்குமார் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்துள்ளார். அப்போது சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்கள் முகமது அலி, பார்த்திபன் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளார். பின்னர், ரவுடி பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தை உணவகத்தின் உள்ளே எடுத்துச் சென்று நிறுத்திவிட்டு நாற்காலிகளையும், தண்ணீர் பாத்திரங்களையும் தூக்கி அடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, உணவக உரிமையாளர் இல்லாததால் ஊழியர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.
இதனையடுத்து இன்று காலை மீண்டும் உணவகத்துக்கு வந்த பிரேம் குமாரை கண்ட ஊழியர்கள், இதுகுறித்து உணவக உரிமையாளர் ரவிக்கு தகவல் தெரிவித்து, காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மீன்பிடி துறைமுக காவல்துறையினர் பிரேம் குமாரை கைது செய்தனர். காசிமேடு துறைமுகம் பகுதியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், காவல்நிலையம் அருகில் இருந்தும் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்றும், உடனடியாக தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.