சென்னை அயனாவரத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் தலைமறைவாக இருந்த நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணையின்போது, அவர் சென்னை புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருப்பதாக அயனாவரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவலர்கள் சங்கரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அயனாவரம் பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்து கஞ்சாவைப் பறிமுதல்செய்வதற்காக நியூ ஆவடி சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது, புதர் ஒன்றில் அருகே கஞ்சாவை பதுக்கிவைத்திருப்பதாக சங்கர் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் காவல் துறையினர் சங்கரை இறக்கி சோதனை நடத்தியதில் திடீரென புதருக்குள் இருந்த கத்தியை எடுத்த சங்கர், முபாரக் என்ற காவலரை வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனிருந்த காவல் ஆய்வாளர் நடராஜ், தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சங்கரை சுட்டார். அதில் சங்கர் உயிரிழந்தார். அதையடுத்து சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காவலர் முபாரக் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காயமடைந்த காவலர் முபராக்கை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான சங்கர் மீது மூன்று கொலை வழக்குகள், நான்கு கொலை முயற்சி உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஏற்கெனவே சங்கர் ஒன்பது முறை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல் நேற்று நடந்த கஞ்சா ரெய்டில் ரவுடி சங்கருக்குத் தொடர்பு உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் காவலர் முபராக் உள்பட ஐந்து காவலர்கள் சங்கரை கைதுசெய்தனர்.
பின்னர் மறைத்துவைத்திருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்வதற்காக, சங்கர் நியூ ஆவடி சாலை அருகே அழைத்துச் சென்றனர். அப்போது காவலர் முபராக்கை ரவுடி சங்கர் வெட்டியதால் தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் நடராஜன் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார்.
இந்த என்கவுன்டர் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் விசாரணைக்கு பிறகே அறிக்கை வெளிவரும். இதுமட்டுமில்லாமல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் நபர்களைக் கண்காணித்துவருகிறோம். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதற்கிடையே சங்கர் மரணத்திற்கு காவல் துறையே காரணம் எனவும், திட்டமிட்டு சங்கரை கொலை செய்துவிட்டதாகக் கூறி சங்கரின் தாய் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா ஆகியோர் குற்றஞ்சாட்டினர். மேலும் மரணத்திற்குண்டான சரியான விளக்கத்தை காவல் துறை தரும் வரையில் உடலை வாங்கப்போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை - தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை!