சென்னை: ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பாளர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் தங்கள் நிறுவனம் மூலம் தரமிக்க படங்களை வழங்கி பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர். ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகில் மேலும் சில படங்கள் இவரது தயாரிப்பில் வரவிருக்கின்றன.
இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக 'சுப் யாத்ரா' என்னும் படம் மூலம் குஜராத்தி சினிமாவில் பயணத்தை தொடங்குகின்றனர். இந்த ரீமேக் படத்தில் குஜராத்தி சூப்பர் ஸ்டார் மல்ஹர் தாக்கர், மோனல் கஜ்ஜர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை குஜராத்தி திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர் மனிஷ் சைனி இயக்குகிறார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட 'கூழாங்கல்' (Pebbles) ஏற்கெனவே ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவு உட்பட சர்வதேச அங்கீகாரங்களைப் பெற்றது. 'ராக்கி' படம் மாறுபட்ட அழுத்தமான கதைக்காக பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர் ஆகியோர் நடிப்பில் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் பரபர திகில் படமான 'கனெக்ட்’ என்னும் படமும் மற்றும் சூரரைப் போற்று புகழ் கிருஷ்ண குமார், பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி, பிரபல கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் சகோதரி மால்தி சாஹர் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்கும் "வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்" என்ற ரொமான்டிக் காமெடி திரைப்படமும் தயாரிப்பில் உள்ளது.
அறிமுக இயக்குநர் அருண் இயக்கத்தில் கவின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஊர்க்குருவி’ படமும் பரபரப்பாக உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: அசால்ட் காட்டும் அரபிக் குத்து; 100 மில்லியனை தாண்டியது...!