சென்னை: எண்ணூர் நேதாஜி நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் ரவுடி ஆறுமுகம் (40). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில் மனம் திருந்தி ஆட்டோ ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆகாத இவர் தாயுடன் தனியாக வசித்துவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (செப். 26) இரவு குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் ஆறுமுகம் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்டு ஆறுமுகத்தை வெளியே வர அழைத்துள்ளனர். இதனால் பயந்துபோன ஆறுமுகம் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
முன்விரோதம் காரணமாக கொலை
அதற்குள் அந்தக் கும்பல் ஆறுமுகத்தின் வீட்டுக் கதவை உடைத்து, அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்து தப்பி ஓடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (19), அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த பியான் வினோத் குமார் (23), கிளிண்டன் (21), தேசப்பன் (22), ஆகாஷ் (18) என்பது தெரியவந்தது.
மேலும் முன்விரோதம் காரணமாகக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஐந்து பேரையும் கைதுசெய்ய காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவினர் மிரட்டல்: ஸ்டாலின் வீட்டின் முன் ஒருவர் தீக்குளிப்பு