புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம் நடைமேடையில் ராஜமுத்து (28) என்பவர் நடந்த சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி செல்ஃபோன், 650 ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக எம்ஜிஆர் மத்திய ரயில் நிலைய காவல் துறையினரிடம் ராஜமுத்து புகார் அளித்தார். புகாரில் அடிப்படையில், ரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடிவந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கொள்ளையனை நேற்று காலை சென்ட்ரல் மூர்மார்க்கெட் வளாகத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இவர் வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (34) என்பதும், மேலும் இரவு நேரங்களில் ரயில் நிலையத்தில் உறங்கும் பயணியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்ஃபோன், பணத்தை கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து ஆறு செல்ஃபோன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் பிரேம் குமாரை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே இவர் மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.