திருவிழா காலங்களில், குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரிடம், மிட்டாய் கொடுத்து தங்க நகைகளை திருடி செல்லும் நபர்களிடம் இருந்து தங்களது குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள் என காவல்துறையினர் எச்சரிப்பது வழக்கம்.
ஆனால் இதில் சற்று வித்தியாசமாக கல்யாண மண்டபங்களில் தங்க நகைகளை திருடும் கும்பலிடம் இருந்து எச்சரிக்கும் விதமாக தற்போது சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதில் ஒன்று தான் தலைமை காவலர் வீட்டு திருமணம் நடந்த திருமண மண்டபத்தில் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.
சென்னை காவல் கட்டுபாட்டு அறையில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சசிகுமார். இவரது குடும்ப திருமண நிகழச்சி சென்னை வடபழனியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்ட நெரிசலாக இருந்த நேரத்தில் அவரது மகள் கழுத்தில் கிடந்த 4சவரன் தங்க நெக்லஸ் மாயமானது.
இதை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், உறவினர்களுடன் சசிகுமாரும், அவரது மனைவியும் பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கி சென்று கழுத்தில் கிடந்த தங்க நெக்லஸை பறித்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சசிகுமார் உடனே வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்ஆய்வாளர் தினேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. பின்னர் சிசிடிவி காட்சியின் உதவியோடு அடையாளம் தெரியாத நபரை தேடிவந்தனர்.
மேலும் தமிழக காவல்துறையினரின் வாட்ஸ்ஆப் குழுவிலும் அந்த நபரின் புகைப்படம் பகிரப்பட்டது. இதில் புதுச்சேரியில் இதுபோல கைவரிசை காட்டி வந்த கொள்ளயன் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அவரிடம் 17சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை அழைத்து கொண்டு, திருமணம், திருவிழா, சந்தை, காதுகுத்து உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது, விலையுர்ந்த நகைகளை அணிவித்து அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குழந்தைகளின் மீது கவனம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களில் இருந்து காத்து கொள்ளாலம்.