சென்னை காசிமேடு சூரிய நாராயண தெருவில் உள்ள அகில இந்திய மீனவர் சங்க அலுவலகத்தில் 'உலக மீனவர் தினம்' (World Fisherman's Day) கொண்டாடப்பட்டது.
அப்போது அகில இந்திய மீனவர் சங்க தேசிய செயல் தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான நாஞ்சில் ரவி பேசியதாவது, 'உலக மீனவர் தினவிழாவை இன்று (நவம்பர் 21) கொடியேற்றி கொண்டாடியுள்ளோம். இந்நேரத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், அரசுக்கு நாங்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளோம்.
வேளாண் மசோதாவை எப்படி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ரத்து செய்ய உள்ளதோ, அதேபோல் மீன்வள மசோதா 2021-ஐ ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலில் சாலையே இல்லாமல் மீனவர்கள் மீது சாலை வரி, பசுமை வரி, கலால் வரி என மதிப்புக் கூட்டப்பட்ட அனைத்து வரிகளும் மீனவர்களுக்கு விதிக்கப்படுகிறது.
ஆண்டிற்கு 70 ஆயிரம் கோடி அந்நியசெலாவணி ஈட்டித் தரும் மீனவர்களுக்கு அனைத்து வரிகளையும் ரத்து செய்து, உற்பத்தி விலையில் மீன்பிடித் தொழிலுக்கு டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோமாவிற்குச் செல்லும் நிலையில் மீன்பிடித்தொழில்:
மீன்பிடித் தொழில் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் (ICU) உள்ளது. வென்டிலேட்டர் உதவியுடன் அது தற்போது செயல்பட்டு வருகிறது. இன்னும் இதே நிலைமை தொடர்ந்தால், கோமாவிற்குச் சென்றுவிடும் நிலையில் தான் மீன்பிடித்தொழில் உள்ளது. எனவே, அரசு அனைத்து வரிகளையும் ரத்து செய்து டீசல் மானியத்தை வழங்க வேண்டும்.
காசிமேடு மீன்பிடித் துறைமுகம் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சாதாரணமாக 800 படகுகள் கட்ட வேண்டிய இடத்தில் 2 ஆயிரம் படகுகள் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மழைக்காலங்களில் ஆண்டுக்கு 100 படகுகள் வரை சேதமடைந்து விடுகின்றன. மேலும் கடந்த ஆட்சியில் மழைக் காலங்களில் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சம் மானியத்தை அரசு வழங்கியது.
தற்போது அதனை ரூ.10 லட்சமாக மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மீனவ சங்க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.