புதிய பெருங்களத்தூரைச் சேர்ந்த முரளி தாக்கல் செய்த மனுவில், தங்கள் பகுதியில் பழுதடைந்துள்ள சாலையை சரிசெய்த அலுவலர்கள் விதிகளின் படி சாலை அமைக்காததால் வீடுகளை விட சாலை உயரமாகி விட்டது. இதனால் கதவுகளைத் திறக்க முடியாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காலங்களில் மழை நீர், கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் 2016, 2017, 2018ல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் சாலை பணிகளை மேற்கொள்ளும் முன் விதிமுறைகள்படி சாலையை தோண்டி மீண்டும் புதிய சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சாலைகள் மீண்டும் போடப்பட்டது என கூறப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மெட்ரோ ரயில் பணிகள் தான் சாலை சேதமடைய காரணம் என்று கருதமுடியாது. யாரையோ காப்பாற்ற நீதிமன்றத்தில் தவறான ஆவணங்களை சமர்பிக்க வேண்டாம். அப்படி தவறான தகவலை சமர்ப்பித்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தனர். தரமற்ற சாலைகளில் ஏற்படும் பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அடிக்கடி பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களில் சென்னை நகர் முழுவதும் உள்ள சாலைகள், நடைபாதைகள் பராமரிப்பு என்ற பெயரில் மீண்டும் மீண்டும் எத்தனை முறை போடப்பட்டன என்ற விவரங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.